இலங்கை: தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிதி கிடைப்பதில் தாமதம்

  • 12 ஜூலை 2016

இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள 2500 ரூபாய் இடைக்கால கொடுப்பனவு கிடைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

Image caption தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் சத்தியாகிரகம்

தாங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி காரணமாக இதனை வழங்குவதற்கு, தோட்ட நிர்வாகங்கள் மறுத்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது .

இம்மாதத்தில் வழங்கப்படும் வழக்கமான சம்பளத்துடன் இடைக்கால நிதி 2500 ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள், அது கிடைக்காத நிலையில் ஏமாற்றமும் கவலையும் கொண்டுள்ளனர். . குறிப்பாக, தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாட் கூலியாக 620 ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்த தொகை 1000 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தோட்ட நிர்வாகங்களிடம் ஏற்கனவே கோரிக்கையை முன் வைத்துள்ளன.

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி , உலக சந்தையில் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களைக் கூறி தோட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து மறுத்து வந்தன.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள், நிரந்தர சம்பள அதிகரிப்பு கிடைக்கும் வரை மாதந்தோறும் 2500 ரூபாய் இடைக்கால நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன் வைத்து, கடந்த மே மாதம் 26-ஆம் தேதி, தலைநகர் கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் விளைவாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போது நிரந்தர சம்பள உயர்வு தொடர்பான முடிவு எடுக்கும் வரை ஏப்ரல் மாதம் முதல் 2500 ரூபாய் இடைக்கால நிதி வழங்க இணக்கம் காணப்பட்டிருந்தது.

அதாவது பணிக்கு வரும் நாளொன்றுக்கு, 100 ரூபாய் என கணக்கிடப்பட்டு 2500 ரூபாய் வரை வழங்கப்படுவதற்கு, இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

Image caption தேயிலை தோட்டமே தமது வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் தோட்ட தொழிலாளர்கள்

தோட்ட நிர்வாகங்களுக்கு சலுகை அடிப்படையில் அரச வங்கிக்கடன் வசதிகளை செய்து கொடுப்பதற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவினால் உத்தரவாதமும் உறுதி மொழியும் வழங்கப்பட்டிருந்தது.

இடைக்கால நிதி தொடர்பான ஓப்பந்தமொன்றில், தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன மற்றும் வெளி நாட்டு வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் ஒப்பமிட வேண்டும் என உரிமையாளர் சம்மேளனம் முன் வைத்த நிபந்தனையே, இதுவரை காலமும் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு காரணம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களில் ஒருவரும் இராஜங்க அமைச்சருமான வேலு இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். .

நிர்வாகங்களுக்கு அரச வங்கிகளில் இரு மாத நிதி சலுகை அடிப்படையில் கடன் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வார காலத்திற்குள் அக்கொடுப்பனவு தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர சம்பள உயர்வு கிடைக்கும் வரை இடைக்கால நிதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் வேலு இராதாகிருஷ்ணன் நம்பிக்கை வெளியிட்டார்.