யாழ் பல்கலையில் மாணவர்கள் கைகலப்பு

  • 16 ஜூலை 2016

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து, விஞ்ஞானத் துறையை பல்கலைக்கழக நிர்வாகம் மறு அறிவித்தல் வரும்வரை மூடியிருப்பதாக அறிவித்துள்ளது.

விஞ்ஞானத் துறை மூடப்படுவதையடுத்து விடுதிகளில் உள்ள அந்தத் துறையின் கல்வி கற்கும் மாணவர்களை விடுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் அந்த அறிவித்தலில் உத்தரவிடப்பட்டிருக்கின்றது.

பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்களை சனியன்று மரபு ரீதியாக தமிழ் கலாசாரத்திற்கு அமைவாக நாதஸ்வரம் மற்றும் மேளவாத்தியத்துடன் வரவேற்றபோது, சிங்கள மரபுக்குரிய கண்டிய நடன நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இரு தரப்பு மாணவர்களிடையேயும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து, பத்து மாணவர்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கிடையிலான கைகலப்பு குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.