திருகோணமலையில் புத்தர் சிலைகளை அமைப்பதால் சர்ச்சை

Image caption தமிழர்கள் வாழும் சாம்பல்தீவு சந்தியிலும் புத்தர் சிலை

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகளை வைப்பதற்கும் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிகள் தொடர்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

திருகோணமலை மாவட்டம் சாம்பல்தீவு சந்தியில் பௌத்த பிக்குமார்கள் உட்பட ஒரு சிலரால் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றார் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான கே. துரைரெத்தினசிங்கம்.

சாம்பல்தீவு சந்தியில் ஏற்கனவே சோதனை சாவடி அமைத்து நிலை கொண்டிருந்த இராணுவத்தினரால் அந்த இடத்தில் அரச மரமொன்று நாட்டப்பட்டு சிறிய புத்தர் சிலையொன்றும் அவர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தது.

சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்திலிருந்து விலகிக் கொண்ட இராணுவத்தினரால் புத்தர் சிலை எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இராணுவம் வெளியேறிய பின்னர் பிள்ளையார் சிலையொன்று தங்களால் வைக்கப்பட்ட போது அடையாளம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டதாக உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்திலே தற்போது பௌத்த பிக்குமார்கள் உட்பட சிலரால் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு வெள்ளரசு மரமும் நாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களையடுத்து அந்த பகுதியில் காணப்பட்ட முறுகல் நிலை காரணமாக 24 மணி நேரமும் காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றார்கள்.

கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் நடைபெற்றது போல் இதுபோன்ற சம்பவங்கள் தற்போதைய ஆட்சியிலும் இடம் பெறுவது கவலையளிக்கின்றது என்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினரான கே. துரைரெத்தினசிங்கம்.

அசம்பாவிதங்களையும், உயிரிழப்புகளையும்

கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் திருகோணமலை பஸ் நிலையம் முன்பாக புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக இடம் பெற்றிருந்த அசம்பாவிதங்களையும், உயிரிழப்புகளையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சைவெளி பிரதேசத்தில் மட்டும் 14 பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிதி ஒதுக்கீடுக்கு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை தான் எதிர்த்ததாகவும் கூறினார்.

"தமிழர்களும், முஸ்லிம்களும் வாழும் பகுதிகளிலே அநேகமான விகாரைகளும் பௌத்த வழிபாட்டு தலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் பௌத்த வழிபாட்டு மையங்களை அமைப்பது இனங்களுக்கிடையில் எதிர்பார்கப்படும் நல்லிணத்திற்கு குந்தகமாக அமையும் " என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.