நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை , வெளிநாடு செல்ல தடை - நீதிமன்றம் உத்தரவு

  • 18 ஜூலை 2016
Image caption நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கிய நிதிமன்றம் அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்திருக்கிறது

கறுப்பு பண குற்றச்சாட்டின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் அவரது வெளிநாட்டு பயணங்களை முற்றாக தடை செய்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட வழக்கு அழைக்கப்பட்ட போது, கருத்துக்களை தெரிவித்த போலிசார் விசாரணைகள் மேலும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை வழங்கப்பட்டால், சாட்சிகளுக்கு அழுத்தங்கள் கொடுக்க வாய்ப்புக்கள் இருப்பதால் அவரை மேலும் விளக்க மறியலில் வைக்க அனுமதிக்கும்படி போலிசார் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் அந்த வேண்டுகோளை நிராகரித்த நீதிபதி சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷ சாட்சிகளுக்கு அழுத்தங்களை கொடுத்தாக நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களை சமர்ப்பிக்க போலிசார் தவறியுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி ராஜபக்ஷவை 15 இலட்சம் ரூபாய் பிணையின் கீழ் விடுதலை செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த நாமல் ராஜபக்ஷ தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்யப்படாலும் அரசாங்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.