இலங்கை: ஊதிய உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

இலங்கையில் பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வலியுறுத்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்தளை நகரில் இரண்டு ஆர்பாட்டங்கள் நடைப்பெற்றன.

Image caption நாட் கூலியை அதிகரிக்க வேண்டுமென்று நடந்த போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு, காணி உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டங்கள் நடைப்பெற்றன.

மாத்தளை மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பெருந் தோட்டத் தொழிலாளர்களும், குடியிருப்பாளர்களும், சமூக ஆர்வலர்களும் என பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 620 ரூபாய் நாள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தி குரல் எழுப்பினார்கள்.

விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு கிடைக்கிறது. ஆனால், தங்களுக்கு சம்பள உயர்வு மறுக்கப்படுவதாக போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு கூறுகின்றது.

சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி உரிமையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஒரு இலட்சம் கையொப்பங்களை திரட்டும் வேலைத்திட்டமொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெருந்தோட்ட குடியிருப்பாளர்களுக்கு குடியிருப்புக்காக 20 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரத்திற்காக ஒரு ஹெக்டர் நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் பெருந் தோட்டம் என்பதற்கு பதிலாக கிராமம் என அழைக்கப்பட வேண்டும்.

பெருந் தோட்ட காணி விவகாரங்களை கையாள தனி ஆணையாளரொருவர் நியமிக்கப்பட வேண்டும் ஆகிய நான்கு விடயங்களை உள்ளடக்கிய மனுவொன்றிலே இந்த கையொப்பங்கள் திரட்டப்படுகின்றன.

இந்த மனுவை வரும் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கும் வகையில், இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரான எஸ்.டி.கணேசலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.