குமரன் பத்மநாதனின் வெளிநாட்டு பயணங்களை அக்டோபர் 25 வரை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் பத்மநாதனின் வெளிநாட்டு பயணங்களை வரும் அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி வரை தடை செய்யும் உத்தரவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption குமரன் பத்மநாதன்

குமரன் பத்மநாதனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிடுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனுவொன்றை ஆராய்ந்த பின்னர் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

இன்று இந்த வழக்கு அழைக்கப்பட்ட போது கருத்துக்களை தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஊடாக குமரன் பத்மநாதன் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக அறிவித்தனர்.

இதன்படி இந்த மனு மீதான மேலதிக விசாரணைகளை வரும் அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக தெரிவித்த நீதிபதிகள் அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றங்களை அறிவிக்குமாறு அரச தரப்பின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

அதுவரை குமரன் பத்மநாதனின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.