இலங்கை அமைச்சரவை சட்ட விரோதமானதென்று தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கறிஞர் அருணா லக்சிறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பிரதிவாதிகளாக பிரதமர் உள்பட நூறுக்கும் மேட்பட்ட அமைச்சரவையின் அங்கத்தவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியல் சாசனத்தின்படி நாட்டில் தேசிய அரசாங்கமொன்று ஆட்சியில் இருக்கின்ற போதுமட்டும் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையோன்றை நியமிக்க முடியுமென்று குறிப்பிடப்பட்டுள்ளதாக மனு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தேசிய அரசாங்கமென்பது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் உள்ளடக்கப்பட்ட ஒரு அரசாங்கமென்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு கட்சிகளினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தை தேசிய அரசாங்கமென்று கூற முடியாதென்று தெரிவித்துள்ள மனுதாரர், தற்போதைய அரசாங்கத்திற்கு 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்களை நியமிக்க அரசியல் சாசனத்தின் கீழ் அவகாசம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு மனு மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு எதிர் வரும் செப்டம்பர் மாதம் 22 -ஆம் தேதியன்று விசாரிக்கப்படும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.