இலங்கை: மிக் விமானங்கள் கொள்வனவு ஆவணங்கள் மாயம்

கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் அறிவித்தனர்.

Image caption கோப்பு படம்

கடந்த ஆட்சிக் காலத்தில் மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் போது மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் இன்று மீண்டும் அழைக்கப்பட்டபோது பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக ஆராயும் விசேட போலீஸ் குழுவினர் இதனை அறிவித்தனர்.

இதன்படி, மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் போது, யுக்ரைன் நாட்டு நிறுவனமொன்றுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் முதல் பிரதி உள்பட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி இந்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளது தொடர்பாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதேபோன்று சதி திட்டமொன்று காரணமாக சம்பந்தப்பட்ட ஆவணங்கள் காணாமல் போயிருந்தால், அதற்கு பொறுப்பாகும் நபர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் போலீசாருக்கு மேலும் உத்தரவிட்டது.