இலங்கையில் சர்ச்சை: காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் தேவையா?

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகளின் போது இந்த கோரிக்கை காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன் வைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மரண சான்றிதழ்களில், மரணத்திற்கான காரணம், `காணாமல் போனவர்' என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன ஒருவருக்கு எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும்? என்ற வினாவும் இந்த அமர்வின் கருத்துக்களை முன் வைத்த பெண்ணொருவரால் எழுப்பப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் தற்போது நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாக கருத்தை முன் வைத்த செங்கலடியை சேர்ந்த அமலராஜ் அமலநாயகி, "காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழுக்கு பதிலாக காணாமல் போனவர்கள் என்ற சான்றிதழ் வழங்குவதற்கு அரசாங்கம் பல மாதங்களுக்கு முன்னர் தீர்மானம் எடுத்தும் அந்த சான்றிதழ் கூட இதுவரை எவருக்கும் கிடைக்கவில்லை. அதில் கூட இன்னமும் இழுபறி நிலை தான் காணப்படுகின்றது. அந்த சான்றிதழ் விரைவாக வழங்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

காணாமல் போனவர்கள் செயலணி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், "யாரும் தாங்களாக காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதே சரியான சொற்பதம்" என அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தக் கால கட்டத்திலே இவரது கணவனும் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது. அன்று முதல் தனது கணவனை இவர் தேடி வருகின்றார்.

''தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடமாகின்ற நிலையில் இதுவரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை'' என அமலராஜ் அமலநாயகி கவலை வெளியிட்டிருந்தார்.

''இந்த செயலணியிலும் தான் நம்பிக்கை வைக்கவில்லை'' என்று அவர் தனது கருத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக வெளியாகியுள்ள சந்தேகம் குறித்தும் இந்த செயலணி முன்னிலையில் பொது மக்களால் கருத்துக்கள் முன் வைக்கபட்டன.

மூத்த பிரஜைகள் அமைப்பொன்றின் தலைவரான மு. வாமநாதன், ''இந்த சந்தேகம் தொடர்பாக அரசாங்கம் தனது நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு சர்வதேச ரீதியாக வைத்தியர்களின் உதவி பெறப்பட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.