இலங்கை: இதுவரை நிரந்தரக் குடியிருப்பு பெறாத மீரியபெத்தை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோர்

Image caption அடிப்படை வசதிகளுடன் தனித் தனி வீடுகள்

இலங்கையில் 2014 ஆம் ஆண்டு பெரிய இயற்கைப் பேரழிவு என கருதப்படும் பதுளை மாவட்டம் மீரியபெத்தை நிலச்சரிவு பேரழிவில் பாதிப்புக்குள்ளான பெருந்தோட்டக் குடும்பங்களுக்கு 20 மாதங்கள் கடந்தும் இதுவரையில் நிரந்தரக் குடியிருப்பு வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை.

2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி ஏற்பட்ட இந்தப் பேரழிவு காரணமாக சுமார் 35 பேர் நிலச்சரிவில் புதையுண்டு உயிரிழந்தும் காணாமலும் போயுள்ளனர்.

தமது உறவுகளையும் இருப்பிடங்களையும் உடமைகளையும் இழந்துள்ள 75 குடும்பங்களுக்கு இதுவரை மாற்றுக் குடியிருப்பு வசதிகள் கிடைக்கவில்லை.

மக்கள்தெனிய என்னுமிடத்தில் இவர்களுக்காக தனித் தனி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

Image caption 75 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி

20 மாதங்களுக்கு மேலாக அந்தப் பகுதியிலுள்ள தேயிலை தோட்டமொன்றில் தங்கியுள்ள இந்த குடும்பங்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை வெளியிட்டுள்ளனர்

சிறிய அறை ஒன்றில் கணவன், மனைவி மற்றும் வளர்ந்த பிள்ளைகள் என வசிக்கும் இவர்கள் தாங்கள் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலச்சரிவு பேரழிவு ஏற்பட்டபோது 3 மாதங்களுக்குள் நிரந்தரக் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அந்நேரத்தில் இடர்முகாமைத்துவ அமைச்சு கூறியிருந்தது.

குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தறுவாயில் தற்போது காணப்பட்டாலும் எதிர்வரும் தீபாவளிக்கு முன்பு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பாதிப்புக்குள்ளான பெருந்தோட்டக் குடும்பங்கள் காத்திருக்கின்றன.