ஆகஸ்ட் 22 வரை நாமல் ராஜபக்ஷவுக்கு விளக்க மறியல்

  • 15 ஆகஸ்ட் 2016

கருப்பு பண குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்பட இரண்டு சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவிட்டார்.

Image caption கோப்பு படம்

இன்று காலை வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக, நிதி மோசடிகள் சம்பந்தமாக ஆராயும் விசேட போலிஸ் குழு முன்பாக, நாமல் ராஜபக்ஷ அழைக்கப்பட்டார்.

வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட போலீசார், பின்னர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்தனர். நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த போலீசார், சட்ட விரோதமாக சம்பாதித்த கருப்பு பணத்தை பயன்படுத்தி நாமல் ராஜபக்ஷ ஹெலோகொப் எனும் நிறுவனத்தின் 45 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால், அதன் மூலம் விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபர்களை எதிர் வரும் 22-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.