மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு எம்.பி.க்கள் 7 பேரின் கட்சிப் பதவி பறிப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை ரத்து செய்வது அந்த கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption மைத்ரிபால சிறிசேன

அக்கட்சி இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாரச்சி, சீ.பி. ரத்னாயக்க, ரோஹித்த அபேவர்த்தனர், மகிந்த யாப்பா அபேவர்த்தன, ஜகத் பாலசூரிய , காமினி லொகுகே ஆகியோரின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு பறிக்கப்பட்ட பதவிகளுக்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக புதிதாக 16 தொகுதி அமைப்பாளர்களும் 24 மாவட்ட அமைப்பாளர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து பாதயாத்திரையில் ஈடுபட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட நியமங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.