யாழ்ப்பாணம் - ஹம்பாந்தோட்டை இடையே நல்லிணக்க நடைப்பயணம்

நாட்டில் நிரந்தர சமாதானத்தையும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு நடைப்பயண பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பேரணிக்கான ஏற்பாட்டை இலங்கை மனித உரிமைகள் இயக்கம் செய்திருக்கின்றது.

இரண்டாவது நாளாகிய இன்று இந்தப் பேரணி வவுனியாவை வந்தடைந்தபோது, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார தலைமையிலான குழுவினர் அதனை வரவேற்றனர்.

மோசமான யுத்தத்திற்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளை பேண வேண்டியது அவசியம் என்பதையும் இந்தப் பேரணி வலியுறுத்துவதாக மனித உரிமைகள் இயக்கத்தின் பொதுச் செயலர் ஜயந்த கலுபொவில செய்தியாளர்களிடம் கூறினார்.

வடபகுதி மக்களின் உரிமைகளும், அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும் வழங்கப்படுவதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் பேரணியை நாங்கள் ஒழுங்கு செய்துள்ளோம்.

இப்போது நடைபெறுகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியல் செயற்பாட்டின் ஊடாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார் ஜயந்த கலுபோவில.

கிளிநொச்சியில் மீறப்பட்டுள்ள காணி உரிமைக்காகவும் குரல் கொடுப்போம் என அவர் கூறுகின்றார்.

இந்தப் பேரணி தலைநகரமாகிய கொழும்பு உட்பட பல்வேறு நகரங்களின் ஊடாக நாட்டின் தென்கோடிக் கரையில் உள்ள ஹம்பாந்தோட்டையை அடுத்த மாதம் 7 ஆம் தேதி சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.