இலங்கை: வவுனியா பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

வவுனியா ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் தனியார் காணியில் இருந்து, மேலும் ஒரு தொகுதி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை
Image caption கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியைத் துப்பரவு செய்தபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் துப்பாக்கிகள் இருப்பதைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியிருந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை காவல் துறையினர் 30 துப்பாக்கிகளைக் கண்டெடுத்திருந்தனர்.

Image caption அகழ்வு வேலைகள் நடந்த காணி

அங்கு மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் (இன்று) காவல் துறையினர் அகழ்வு வேலைகளை மேற்கொண்ட போது, மேலும் 11 துப்பாக்கிகளைக் கண்டெடுத்துள்ளனர்.

ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளினால் இந்த துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

இங்கு கைப்பற்றப்பட்ட 41 துப்பாக்கிகளும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், அத்துடன் அகழ்வு வேலைகள் அங்கு நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.