30 ஆண்டுகளுக்கு பின் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு அறுவடை

இலங்கை வடமாகாணத்தின் முக்கிய உப்பளமாகிய ஆனையிறவு உப்பளத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக திங்கள்கிழமை உப்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை

யுத்த மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஆனையிறவு உப்பளம் முந்தைய அரசாங்கத்தில் சுமார் 125 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, உப்பு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆயினும், இந்தப் புனரமைப்புப் பணிகளின் பின்னர் இப்போதுதான், அங்கு உப்பு அறுவடை செய்ய முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Image caption ஆனையிறவு உப்பளம்

வர்த்தக கைத் தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அது முழு அளவில் இன்னும் செயற்படத் தொடங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மட்டத்தில் உப்பு தேவையை நிறைவு செய்வதில் ஆனையிறவு உப்பளமே பெரும் பங்காற்றியிருந்தது. சுமார் ஐம்பதாயிரம் மெட்ரிக் டன் உப்பு இங்கு உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இப்போது எட்டாயிரம் மெட்ரிக் டன் அளவிலேயே ஆரம்ப நிலையில் உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உப்பு அறுவடை நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், கண்டாவளை பிரதேச செயலாளர் முகுந்தன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.