யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குக் கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் பிடிப்பட்டது

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து இந்தியாவுக்குக் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் ஐந்தரை கிலோ நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.

சிறிய ரக படகொன்றில் இந்தக் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்கள் பயணம் செய்த படகையும் கைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் நூறு கிராம் எடையுள்ள 55 தங்க பிஸ்கட்டுகள் என்று கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவல் ஒன்றையடுத்து 30-ஆம்தேதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.