யாழ்ப்பாணத்தில் பான் கி மூன்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் இன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் வட மாகாண ஆளுநர் அலுவலகப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வட மாகாணத்தின் பல மாவட்டங்களிலும் இருந்து இந்த ஆர்ப்பாட்டத்திற்காக வருகை தந்திருந்த பெருமளவிலான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, காணாமல் போயுள்ள தமது உறவுகளை இந்த வருட இறுதிக்குள் கண்டுபிடித்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுப்பதற்கும், கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைக் கையளிப்பதற்குமாகக் காத்திருந்தனர்.

எனினும் பாதுகாப்பு நிமித்தம் ஐ.நா செயலாளர் நாயகத்தை பிரதான வாயிலைத் தவிர்த்து மாற்று வழியின் ஊடாக, ஆளுநரின் அலுவலகத்திற்குள் காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

ஆயினும் ஐ.நா அலுவலக அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து மகஜர்கள் மற்றும் கடிதங்களை ஐநா செயலாளர் சார்பில் பெற்றுச் சென்றனர்.

ஐநா செயலாளரின் வருகையையொட்டி, யாழ் அரச செயலகப் பிரதேசம் மற்றும் யாழ் நூலகப் பிரதேசம் ஆகியவற்றில் காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.