சுதந்திரக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சி மாநாடுகளில் கலந்து கொள்ள மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு

  • 11 செப்டம்பர் 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடுகளில் கலந்துகொள்வதை அந்த கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கண்டித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப் படம்

கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதே போல, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்வதாக தெரிவித்த ராஜபக்ஷ, இதன் காரணமாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்று இரண்டு கட்சிகள் இருப்பதில் எந்த பயனும் இல்லை என்று கூறிய மகிந்த ராஜபக்ஷ, இரு கட்சிகளையும் கலைத்து விட்டு தனி கட்சியொன்று உருவாக்கப்படும் அவகாசம் இருப்பதாக தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் உண்மையான ஆதரவாளர்களுக்கு தலைமைத்துவம் வழங்க தனது குழு தயாரென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் தயாசிறி ஜெயசெக்கற, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்துக் கொண்டதன் மூலம் சுதந்திரக் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியில் அமர்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி சிறிசேனவிற்கு முக்கிய பங்களிப்பு வழங்கியதன் காரணமாக அவர் அந்த கட்சியின் மாநாட்டில் கலந்துக் கொண்டதில் எந்த தவறும் இல்லை என்று அமைச்சர் ஜெயசேகர மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்