வியாபம் ஊழல்

 1. கோவையில் 2வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

  மு. ஹரிஹரன்

  எஸ்.பி. வேலுமணி
  Image caption: எஸ்.பி. வேலுமணி

  கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்களின் நிறுவனங்களிலும் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக இன்றும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது. எஸ்.பி.வேலுமணியின் நெருக்கமான நண்பர்களாக அறியப்படும் சந்திரப்பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் நிர்வகிக்கும் கே.சி.பி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

  மேலும், மதுக்கரை அருகே உள்ள கே.சி.பி நிறுவனத்தின் அலுவலகத்திலும், திருப்பூர் அருகே வேலுமணிக்கு நெருக்கமான நபர்களின் மற்றொரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  நேற்று அதிகாலை குனியமுத்தூரில் உள்ள வேலுமணியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகரின் இல்லம் மற்றும் கே.சி.பி நிறுவனத்தின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் கே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சந்திரப்பிரகாஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்றுவரை அவர் மருத்துவமனையில் இருப்பதாகவே தெரியவருகிறது.

  லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் A4 என இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

  வேலுமணியின் மற்றொரு நெருக்கமான நண்பராக கருதப்படும் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர், கே.சி.பி நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் A5 என இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

  வேலுமணியின் மூத்த சகோதரரான எஸ்.பி.அன்பரசன் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்கள் மற்றும் நகைக்கடையிலும் நேற்று சோதனை நடைபெற்றது.

  இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அன்பரசன், சட்டரீதியாக இதனை எதிர் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

  'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்களை கொண்டு எங்களது அனைத்து நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

  சமீபத்தில் இந்த அரசாங்கம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது. அதில் எனது சகோதரர் அமைச்சராக இருந்த உள்ளாட்சித் துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதிமுக பொறுப்பில் இருந்த 10 ஆண்டுகளில் வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் தொழில் வரி போன்ற வரியினங்களை உயர்த்தவில்லை.

  திமுக அமல்படுத்தியிருந்த வரிகளை மட்டுமே வசூலித்து வந்தோம். மேலும் 2019ஆம் ஆண்டு முதல் கோவிட் காரணமாக வரி உயர்வு செய்யவில்லை. இப்படி இருக்க திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கை மக்களிடம் எடுபடவில்லை.

  மேலும், நடக்கவிருக்கும் சட்டசபை கூட்டத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை திசை திருப்பவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

  டெண்டர் மோசடி மற்றும் நிறுவனங்களில் வளர்ச்சி என குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. எனது நிறுவனம் 100 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 10 கோடி டர்ன்ஓவர் செய்யும் நிறுவனம் அடுத்த ஆண்டு 20 கோடி டர்ன்ஓவர் செய்வதில் ஆச்சரியமில்லை.

  அப்படிப்பார்த்தால் அவர்களுக்கு சொந்தமான சன் குழுமங்களில், அன்றைக்கு 10 கோடியாக இருந்த டர்ன்ஓவர், தற்போது 10 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே இந்த சோதனை நாடகம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

  அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அதிமுகவின் பலத்தை நிரூபிப்போம். கடந்த தேர்தலில் கோவையில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியும் வெற்றி பெற்றதை திமுகவினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிமுகவை முடக்க வாய்ப்பிருக்கிறதா என்கிற ரீதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

  அறப்போர் இயக்கமும், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் 3 ஆண்டுகளுக்கு முன் அளித்த புகாரின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கு இப்போது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

  வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம்' என வேலுமணியின் சகோதரர் எஸ் பி அன்பரசன் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

  வானதி ஸ்ரீனிவாசன் ஆதரவு

  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து பாஜக தரப்பில் கோவை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  அதில், இச்சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த தொடர் சோதனைகள், அதிமுகவினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திமுகவில் சேர்ந்த அதிமுகவினர்

  இந்நிலையில், இன்று காலை கோவை 25வது வார்ட்டுக்குட்பட்ட தெப்பக்குளம் வீதி பகுதியில், திமுகவின் கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

  இந்நிகழ்வு கோவை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  முன்னதாக, நேற்று குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தபோது, கோவையை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதனையடுத்து, உரிய அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதற்காகவும், தொற்று பரவும் வகையில் செயல்பட்டதாகவும் 3 பிரிவுகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 200 பேர் மீது கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.