அரவிந்த் கேஜ்ரிவால்

 1. வந்துகொண்டிருக்கும் செய்திடெல்லியில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயார்: உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு

  இந்திய தலைநகர் டெல்லியில் புகை மாசு தீவிரம் ஆகி வருவதையடுத்து, அதை தடுக்கும் விதமாக நகரில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

  அதே சமயம், இந்த முழு முடக்கம் என்பது டெல்லி மட்டுமின்றி அதன் அருகே உள்ள தேசிய தலைநகர் வலய பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தால்தான் அதன் நோக்கம் நிறைவேறும் என்று மனுவில் டெல்லி அரசு குறிப்பிட்டுள்ளது.

 2. இன்றைய நேரலை நிறைவடைகிறது

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,நவம்பர் 13ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் தொடர்பில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 3. டெல்லியில் மோசம் அடையும் புகை மாசு: நவம்பர் 15 முதல் பள்ளிகள் ஒரு வாரத்துக்கு மூடப்படும் - முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

  View more on twitter

  இந்திய தலைநகர் டெல்லியில் மோசமாகி வரும் காற்று மாசுபாடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகுஅதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.

  பிறகு முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் டெல்லியில் பொது முடக்கம் அமல்படுத்தும் திட்டம் தொடர்பான அரசின் நிலை அடுத்த வாரம் தெளிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

  கடந்த வெள்ளிக்கிழமை, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் வலய பகுதியில் (என்சிஆர்) காற்று மாசுபாடு அதிகரித்து வருவதை "அவசரகால" சூழ்நிலை என்று கூறிய உச்ச நீதிமன்றம், காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

  மேலும் வாகனங்களின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்தல் மற்றும் பொதுமுடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பை பரிசீலிக்குமாறும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

  இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், வரும் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கூறினார்.

  அரசு அலுவலகங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்றும் தனியார் அலுவலகங்களுக்கு தனியான ஆலோசனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  டெல்லியில் நவம்பர் 14 முதல் 17 வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை செய்யப்படும் என்றும் அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பிந்தைய பயிர் கழிவுகள் எரிப்பதால் அதன் மாசுபாடு காற்றில் கலந்து டெல்லியில் தாக்கத்தை அதிகரித்து வருவதாக கேஜ்ரிவால் கூறினார்.

  இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார்.

  டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் சனிக்கிழமை காலை 7:35 மணிக்கு 499 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் "கடுமையான" பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காற்றுத் தர வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது.

  புகை மற்றும் மூடுபனியின் அடர்த்தியான அடுக்கு, டெல்லியை அடுத்த ஹரியாணாவின் எல்லை நகரான குருகிராமில் காணப்படுகிறது.

  டெல்லிஎன்சிஆரில் காற்றின் தரம் அவசர நிலையை நோக்கிச் சென்றுள்ளதால், பண்ணை தீ மற்றும் சாதகமற்ற வானிலைச் சூழல்களில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க, வெளி நடமாட்டங்களை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாகனப் பயன்பாட்டை குறைந்தபட்சம் 30 சதவிகித அளவுக்கு குறைக்குமாறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

 4. முதியவர்கள் அயோத்தி செல்ல டெல்லி அரசு நிதியுதவி

  முதியவர்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும் மத தலங்களின் பட்டியலில் அயோத்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.

  இதற்கு டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார் என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

  View more on twitter
 5. வந்துகொண்டிருக்கும் செய்திடெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை

  டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

  விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய இல்லங்களிலேயே பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்றும் டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

 6. "வாக்குச் சாவடியிலேயே தடுப்பூசி": டெல்லி அரசின் புதிய அறிவிப்பு

  கெஜ்ரிவால்

  வாக்களித்த இடத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புதிய பரப்புரையை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தொடங்கியிருக்கிறார்.

  இதன்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எங்கு வாக்களித்தார்களோ அங்கேயே அவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டும். இந்த திட்டத்தின் அடிப்படையில் கூடிய விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

  "பலர் இன்னும் தடுப்பூசி போடும் முகாம்களுக்கே வரவில்லை" என்று கூறிய கெஜ்ரிவால், அதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரவேண்டிய நேரத்தை அவர்களிடம் வழங்குவார்கள் என்றார்.

  தடுப்பூசி ஏன் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைத்து, சம்மதிக்க வைப்பது தொடர்புடைய ஊழியரின் பொறுப்பாக இருக்கும் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.

  டெல்லியின் 70 வார்டுகளில் இந்தத் திட்டம் தொடங்க இருக்கிறது.

 7. டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு

  டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு

  இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தளர்வுகளை அறிவித்துள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

  • 50 சதவீத இருக்கைகளுடன் டெல்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்
  • தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
  • சந்தைகள், மால்கள் ஆட் – ஈவன் அடிப்படையில் இயங்க அனுமதி
  • இந்த தளர்வுகளுடன் மீதமுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

  மேலும், மூன்றாவது அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக இருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

  குழந்தைகளை மூன்றாவது அலை அதிகம் தாக்கும் என்ற எச்சரிக்கை இருக்கும் நிலையில், குழந்தைகள் நல குழு ஒன்று அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

  மேலும் 420 டன் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு தயார் செய்யப்பட்டு வருவதாகவும், புதிய உருமாற்றம் அடையும் வைரஸ் திரிபுகளை கண்டறிய இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்படுவதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

 8. கருப்புப்பூஞ்சை நோயை அபாயகர தொற்று நோயாக அறிவித்தது டெல்லி அரசு

  டெல்லியில் வேகமாகப் பரவி வரும் கருப்புப்பூஞ்சை நோயை அபாயகரமான தொற்று நோயாக அரசு அறிவித்துள்ளது.

  இது தொடர்பாக டெல்லி அரசு வியாழக்கிழமை இரவு வெளியிட்டுள்ள அரசாணையில், "எதிர்ப்பு சக்திகுறைந்த நோயாளிகள், குறிப்பாக கொரோனா நோயாளிகள் ஸ்டிராய்டு மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளை எளிதாக தாக்குகிறது.

  எனவே இந்த அறிவிப்பாணை வெளியாகும் நாளில் இருந்து ஓராண்டுக்கு கருப்புபூஞ்சை நோய் அபாயகர தொற்றாக அறிவிக்கப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

  இந்த தொற்றுக்கான பரிசோதனை, சிகிச்சை முறைகள் அனைத்தும் இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி நடக்க வேண்டும்,

  மியூகோர்மைகோசிஸ் பற்றி வேறு எவரும் தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

  டெல்லி அரசு
 9. ஃபைசர், மாடர்னா கொரோனா தடுப்பு மருந்து நிறுவனங்கள் நேரடியாக வழங்க மறுப்பு - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

  KEJRIWAL

  அமெரிக்காவைச் சேர்ந்த கொரோனா தடுப்பு மருந்து நிறுவனங்களான ஃபைசரும், மாடர்னாவும் நேரடியாக மாநில அரசுகளிடம் கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியாது என்று கூறியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

  தலைநகர் டெல்லியில் 18 முதல் 44 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து போடும் திட்டத்தை கடந்த சனிக்கிழமை தொடங்க அரசு உத்தேசித்திருந்தது. ஆனால், போதிய தடுப்பூசி இல்லாததால் அந்த பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "நேரடியாக கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்க அமெரிக்க நிறுவனங்களான ஃபைசர், மாடர்னாவிடம் கோரினோம்.

  ஆனால், நேரடியாக மத்திய அரசுடன்தான் நாங்கள் பேசுவோம் என்று கூறின. எனவே, டெல்லிக்கு தேவைப்படும் கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்து வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறினார்.

  இரு தினங்களுக்கு முன்புதான் மாடர்னா நிறுவனத்திடம் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பேசி, கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அந்த மாநில அரசுக்கும் நேரடியாக தடுப்பூசி மருந்தை வழங்க முடியாது என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்து விட்டது என்று அமரிந்தர் சிங் தெரிவித்திருந்தார்.

  டெல்லியில் தடுப்பூசி போடும் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால், தினமும் 80 லட்சம் டோஸ்களாவது தேவைப்படும். ஆனால், மே மாதத்தில் 16 லட்சம் டோஸ்களே வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு ஜூன் மாதம் பாதியாக குறைக்கப்பட்டு எட்டு லட்சமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். அதில், தலைநகர தேவையை பூர்த்தி செய்யும் வகையில், டெல்லிக்கு நேரடியாக தடுப்பூசி மருந்துகளை வழங்குமாறு சர்வதேச கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பாளர்களிடம் மத்திய அரசு பேச பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டிருந்தார்.

 10. அரவிந்த் கேஜ்ரிவால் பதிவுக்கு சிங்கப்பூர் ஆட்சேபம்

  "சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் திரிபு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் இது மூன்றாம் அலையாக அது வரக்கூடும்."

  இதன் காரணமாக சிங்கப்பூர் உடனான விமான போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

  ஆனால் இந்தியத் தூதரை இன்று அழைத்த சிங்கப்பூர் அரசு, கொரோனா திரிபை சிங்கப்பூர் உடன் தொடர்பு படுத்துவதற்கு தமது கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்தது.

  இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லி முதலமைச்சர் இந்தியாவுக்காக பேசுபவர் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். பொறுப்பற்ற கருத்துகள் நீண்ட நாட்களாக இருக்கும் உறவுகளை பாதிக்கும் என்றும் அவர் அரவிந்த் கேஜ்ரிவாலைத் தாக்கியுள்ளார். சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் வலுவான கூட்டாளிகளாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

  View more on twitter
பக்கம் 1 இல் 4